முத்திரை கொல்லர் பணியிடத்திற்கு டிச.2ம் தேதி எழுத்து தேர்வு
11/14/2018 4:32:38 PM
நெல்லை: மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முதல் கட்டமாக விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிச.2ம்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள் சட்டமுறை எடையளவு தொடர்பான அடிப்படை கேள்விகள், பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், திறனறிவு மற்றும் புத்திகூர்மை தொடர்பான கேள்விகள் உள்ளடக்கிய 80 வினாக்களுக்கு தேர்வு நடைபெறும்.மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் குறித்த விபரம், அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்களிலும், ஏனைய மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் விபரம், தொழிலாளர் உதவி ஆணையர் (சபாதி) அலுவலகத்திலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 26.11.18 முதல் 28.11.18 வரை அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திலும், பிற மாவட்டங்களை சேர்ந்த தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (சபாதி) அலுவலகத்திலும் அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.