திருச்சி, தஞ்சையில் பெரியார் சிலை அவமதிப்பு: சாலை மறியல்; பதற்றம்
9/24/2018 3:33:48 PM
ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மன்னார்குடி சாலையில்காதராபட்டு பஸ் நிறுத்தத்தில் தந்தை பெரியாரின் முழு உருவசிலை உள்ளது. நேற்று நள்ளிரவு யார் மர்ம நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்து உள்ளனர். இன்று காலை அந்த வழியாக வந்த மக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திராவிடர் கழக நிர்வாகிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு வந்து சிலையில் கிடந்த செருப்புகளை அப்புறப்படுத்தினர். இது குறித்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. திக, திமுக, மதிமுக நிர்வாகிகள் ஒரத்தநாட்டில் திரண்டனர்.
இது குறித்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் கூறும்போது, தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்’ என்றார். இந்த நிலையில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஒரத்தநாடு - மன்னார்குடி சாலையில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். திருச்சி: திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் தோகைமலை மெயின்ரோட்டில் பெரியார் சிலை உள்ளது.
நேற்று இரவு இந்த பெரியார் சிலையிலும் அவமரியாதை செய்யப்பட்டு உள்ளது. பெரியார் கைத்தடி வைத்திருப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையில்கைத்தடி உடைக்கப்பட்டு அதன் அருகிலேயே வீசப்பட்டு உள்ளது.இந்த தகவல் கிடைத்ததும் திராவிடர் கழக நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெரியார் சிலையை அவமதித்த நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.பெரியார் பிறந்த தினத்தையொட்டி சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை போடும்போது ஒருவர் மட்டும் வந்து பெரியார் சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் இப்போது மீண்டும் ஒரத்தநாட்டிலும், சோமரசம்பேட்டையிலும் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவில் 2 இடத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதால் இது திட்டமிட்ட செயல் என்றும், பெரியார் சிலையை அவமதிக்க வேண்டும் என்று ஒரு நெட்ஒர்க் செயல்படுவதாகவும் அவர்களை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.