குட்கா லஞ்ச விவகாரத்தில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை புதிய வழக்குப்பதிவு...ஆதாரங்களை கேட்டு சிபிஐக்கு அவசர கடிதம்
9/8/2025 2:35:47 PM
சென்னை: குட்கா விவகாரத்தில் திடீர் திருப்பமாக ரூ.40 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் ஆதாரங்களை கேட்டு சிபிஐக்கு அதிகாரிகள் அவசர கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் குட்கா என்ற போதைப் பொருள் குடோன் இயங்கி வந்தது. தமிழக அரசால் 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட பிறகும் இந்த போதைப் பொருள் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்தது. அதோடு இந்த சட்டவிரோத செயல்களுக்கு போலீஸ், உணவு பாதுகாப்புத்துறை, மாநகராட்சி, மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதில் குட்கா தயாரிப்பாளர் மாதவராவிடம் ஒரு டைரி சிக்கியது.
அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர், 2 போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு மாமூலாக ரூ.40 கோடி கொடுத்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.
அதில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அப்போது டிஜிபியாக இருந்த அசோக்குமாருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை வைத்து, நடவடிக்கை எடுக்கும்படி முதல்வருக்கு அசோக்குமார் கடிதம் எழுதினார். இதனால் அசோக்குமாரையே ஜெயலலிதா மாற்றிவிட்டு, குட்கா குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டி.கே.ராஜேந்திரனுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.இந்தநிலையில், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபிக்கு நெருக்கமான டிஎஸ்பி சங்கர், புழல் உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் பல அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் முறைகேடு நடந்ததற்கான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் ரூ.40 கோடிக்கு மேல் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் குட்கா விவகாரத்தில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், சிபிஐயிடம் உள்ள ஆவணத்தை தருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவசர கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். தற்போது அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியுள்ளதால், பல போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.