வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி
9/7/2025 2:13:42 PM
நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் திகழ்கிறது. கத்ேதாலிக்க பசிலிக்காக்களில் ஒன்றான இப்பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் ஆண்டு தோறும் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு பேராலய திருவிழா கடந்த 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைத்தார். பின்னர் கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றப்பட்டவுடன் பேராலய கோபுரங்களில் மின்னொளி அலங்கார விளக்குகள் எரியவிடப்பட்டது. வாணவேடிக்கை நடந்தது.தினமும் விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர் பவனி நடந்தது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் ஆலய கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி இன்று (7ம் தேதி) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் மாதா சொரூபத்தை வைத்து இழுத்துக்கொண்டு பாத யாத்திரையாகவும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பேராலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பேராலய வளாகம், கடைவீதி, கடற்கரை, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. நாளை அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. பேராலய விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.