முக்கொம்பு அணை உடைப்பால் டெல்டாவில் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகின: வயலில் கருப்புக்கொடி நட்டு விவசாயிகள் போராட்டம்
9/6/2025 4:59:22 PM
நாகை: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பணிகள் நடந்துள்ளன. நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்து 30 நாட்களே ஆன பயிர்களே பெருமளவில் உள்ளன. சமீபத்தில் கேரளா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வந்த உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டது. இதனால் அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் அணை உடைந்ததால், காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளில் பெயருக்கு மட்டுமே சிறிதளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் பாயவில்லை. இதனால் பல ஆறுகள், கிளை வாய்க்கால்கள் வறண்ட நிலையிலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக சம்பா பயிர்கள் கருக தொடங்கி விட்டன. சில இடங்களில் விளை நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து காணப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கரில் நேரடி விதைத்த விதைகள் முளைக்காமலேயே போய் விட்டன. இவ்வாறு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கரிலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், இன்னும் ஒரு வாரத்தில் எல்லா பயிர்களுக்கும் இதே நிலை ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே முக்கொம்பு அணை சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். கருகும் பயிர்களுக்கு தண்ணீர் கேட்டு நாகை தாலுகா பாலையூரில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்துள்ள நிலத்தில் கருப்புக்கொடிகளை நட்டும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் கோஷம் எழுப்பினர். கூட்டுறவு கடன் கிடைக்காத நிலையில் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் தனியாரிடம் கடன் பெற்று சாகுபடி செய்திருந்தனர். ஏற்கனவே பெரும் பொருளாதார பின்னடைவில் இருந்த இந்த விவசாயிகளுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.