திருவள்ளூர் அருகே மனைவி கடத்தல்? கணவன் புகார்
9/6/2025 3:18:03 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வயலாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (19). கடந்த 16ம் தேதி காலையில், வழக்கம் போல ராஜேஷ் வேலைக்கு சென்றார். மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். மாலையில் ராஜேஷ் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். மனைவியை காணவில்லை. அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் ராஜேஷ் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, ராஜேஸ்வரியை யாராவது கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்தவர் ஆதிகேசவன் மகள் நிஷாந்தி (22). இவர், கடந்த 3ம் தேதி காலை வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் நிர்மலா, திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, நிஷாந்தியை யாராவது கடத்தி சென்றனரா, வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.