வியக்க வைக்கும் பெட்ரோல், டீசல் விலை மத்திய, மாநில அரசுகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி
9/5/2025 4:03:52 PM
* ஓராண்டில் 16 வரை விலை எகிறியது
* விற்பனை 10 சதவீதம் சரிவு
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போவதால் மத்திய, மாநில அரசுகள் மீது ெபாதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்தாண்டு ஜூலை 15ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தினமும் மாலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மறைமுகமாக விலையேற்றும் நடவடிக்கை என இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சில நாட்கள் மட்டும் மிக குறைந்த அளவில் (10 பைசாவுக்கும் குறைவாக) பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் விலை ஏறிக்கொண்டே போனது. தினமும் பைசா கணக்கில் விலை ஏற்றுவதால் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அதுவே மாதக்கணக்கில் ஏற்றும்போது ஒரு ரூபாய், 2 ரூபாய், 3 ரூபாய் என பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போனது. இதனால் கடந்த ஓராண்டாக வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஒரு லிட்டர் 100 ரூபாய் அளவுக்கு விலை உயரும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிவேகமாக விலை உயர்த்தப்படுகிறது. அதன் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.82.41 ஆக அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.75.39 ஆக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் பெட்ரோல் விலை ரூ.17 காசு உயர்ந்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று மாலை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகளவில் உள்ளது.
இதுவும் விலை ஏற்றத்துக்கு ஒரு காரணம் ஆகும். அதாவது பெட்ரோலுக்கு 25 சதவீதமும், டீசலுக்கு 34 சதவீதமும் தமிழக அரசு வாட் வரி வசூலிக்கிறது. எகிறும் பெட்ரோல் விலையால் பைக் ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை போன்ற நகர்களில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள் கவலையடைந்துள்ளனர். விலை ஏற்றத்தை தாக்குபிடிக்க முடியாமல் பலர் பைக்கை ஓரம் கட்டி வைத்துவிட்டு பஸ், ரயில் பயணத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் டெ்ரோல் விலை ரூ.16.50 அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல், டீசல் முகவர்கள் சங்க தலைவர் முரளி கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலையில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, எளிய நடுத்தர மக்கள் தான். குறிப்பாக பெட்ரோல் விலை ஏற்றப்படுவதால் பைக் வைத்திருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். டீசல் விலை உயர்வை லாரி உரிமையாளர்கள் வாடகை உயர்வு மூலம் சமாளித்துக் கொள்கின்றனர். ஆக மொத்தம் அனைத்து பாதிப்பும் மக்களை தான் சென்றடைகிறது. இதையெல்லாம் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. தினசரி விலை நிர்ணயித்துக்கு ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் ரூ.16.50 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விற்பனையும் கடந்த ஓராண்டில் 10 சதவீதம் குறைந்துள்ளது.