பாஜவுக்கு எதிராக கோஷம்: மாணவி சோபியாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: எஸ்பி முரளி ரம்பா பேட்டி
9/5/2025 4:02:18 PM
தூத்துக்குடி: பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் மாணவி சோபியாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று எஸ்பி முரளி ரம்பா தெரிவித்தார். பாஜவுக்கு எதிராக கோஷமிட்ட வழக்கில் கைதான சோபியாவிற்கு ஜாமீன் உத்தரவு கிடைத்த பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் மற்றும் வக்கீல்கள் பாதுகாப்பாக சோபியாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்து நடந்தது குறித்து தெரிவிக்க விருப்பம் தெரிவித்தார் சோபியா. ஆனால் அவரது வக்கீல்கள், பாதுகாப்பு காரணம் கருதி அவர் பேட்டியளிக்க மாட்டார் என மறுத்து அழைத்துச் சென்று விட்டனர்.
இதனிடையே சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்பி முரளி ரம்பா கூறியதாவது:
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சோபியாவின் தந்தை அளித்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அது குறித்து வழக்குபதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் அவசியம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் பாதுகாப்பு கேட்டாலோ சோபியா மற்றும் அவரது வீடு உள்ளிட்டவற்றிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.