கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு: துணை முதல்வரின் ‘ஷூ’வை துடைத்த பாதுகாவலர்
9/5/2025 3:53:30 PM
பெங்களூரு: கர்நாடக துணை முதல்வரின் ‘ஷூ’வை, பாதுகாவலர் ஒருவர் துடைத்து விட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியில், முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர். இந்நிலையில், துணை முதல்வர் பரமேஸ்வரா, கூடுதலாக பெங்களூரு வளர்ச்சித்துறையை கவனித்து வருவதால், உல்சூர் ஏரியில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட, அதிகாரிகள் புடைசூழ சென்றார்.
அப்போது, அவர் அணிந்திருந்த வேட்டி மற்றும் ’ஷூ’வில் சேறும் சகதி ஏற்பட்டு அழுக்கு படிந்தது. அதையடுத்து, அவரது பாதுகாப்புக்கு பணியில் இருந்து பாதுகாவலர் ஒருவர், துணை முதல்வரின் வேட்டி மற்றும் ‘ஷூ’வை கீழே குனிந்து துணியால் துடைத்துவிட்டார். அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் முன்னிலையில், துணை முதல்வரின் ‘ஷூ’வை துடைத்துவிட்ட சம்பவம், கர்நாடக டிவி சேனல்களில் பரபரப்பான விவாதமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து துணை முதல்வர் பரமேஸ்வரா கூறுகையில், ‘‘பாதுகாவலர் எனக்கு உதவ வந்தார். அது அப்போதே முடிந்துவிட்டது. நீங்கள், இந்த சிறு சம்பவத்தை சர்வதேச விவகாரமாக மாற்றிவிட்டீர். நான் இதற்காக, நன்றியுடன் இருக்கிறேன்” என்றார்.
இதுகுறித்து, பாஜ கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறுகையில், ‘‘துணை முதல்வரின் ‘ஷூ’வை துடைத்துவிட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஒரு பொது நபரின் நடத்தை, இந்த வகையில் தேவையற்றது. இதற்காக, துணை முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், கர்நாடகாவில் மழை பெய்த போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட சென்ற அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரிவண்ணா (முதல்வர் குமாரசாமியின் சகோதரர்), பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக பிஸ்ெகட் பாக்கெட்டுகளை தூக்கி போட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், தற்போது துணை முதல்வர் பரமேஸ்வரா, பொது இடத்தில் நடந்து கொண்ட விதம், பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.