அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
9/5/2025 3:52:42 PM
கோபி: அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன்(42). இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி, தங்கமணி தம்பதியின் மகள் சந்தியாவுக்கும்(23) கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்சிஏ பட்டதாரி. இவர்கள் திருமணம் வரும் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி சந்தியா வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதுகுறித்து சந்தியாவின் தாய் தங்கமணி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி அருகே கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்(25) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், தனது மகளை மீட்டு தரும்படியும் கூறியிருந்தார்.
இதையடுத்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூரில் விக்னேஷின் பெற்றோரை பிடித்து அவர்கள் மூலம் கோவையிலிருந்த விக்னேசை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மணப்பாறை மஸ்தான் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தியாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து. இதையடுத்து போலீசார் விக்னேசை சந்தியாவுடன் போனில் பேச வைத்தனர்.
அப்போது சந்தியாவின் செல்போன் எண் மணப்பாறையை காட்டியது உறுதி செய்யப்பட்டதால் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான கடத்தூர் போலீசார் மணப்பாறையில் உள்ள மஸ்தான் தெருவுக்கு சென்றனர். இதற்கிடையில் சந்தியாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால், நேற்று முன்தினம் திருச்சியில் முகாமிட்ட போலீசார், நேற்று காலை மீண்டும் விக்னேஷ் மூலம் சந்தியாவுக்கு பேசச் செய்தனர். விராலிமலை வருமாறு விக்னேஷ் கூறினார். இதனை உண்மை என நம்பிய சந்தியா நேற்று மதியம் 12.45க்கு விராலிமலை வந்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து மீட்டனர்.
இதையடுத்து சந்தியாவை போலீசார் நேற்று மீட்டு வந்து கோபி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சந்தியாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிபிரபா விசாரணை நடத்தியபோது, திருமணம் பிடிக்காததாலேயே வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் அவரது பெற்றோர் அழைக்கப்பட்டு அவர்களிடம் சந்தியா கூறிய விபரங்கள் கூறப்பட்டது. அவர்கள் மகளை தாங்களே அழைத்துச்செல்வதாக கூறினர். உடனடியாக சந்தியாவை திருமணத்துக்காக கட்டாயப்படுத்தக்கூடாது என நீதிபதி அறிவுரை கூறினார். இதன்பிறகு பெற்றோருடன் சந்தியா அனுப்பிவைக்கப்பட்டார். திருமண ஏற்பாடுகள் தொடங்கியபோதே வயது வித்தியாசத்தை காரணம் காட்டி சந்தியா சம்மதிக்கவில்லை. ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.