அறநிலையத்துறையை களங்கப்படுத்துவதை கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பில் செப்.27ல் உண்ணாவிரதம்
9/5/2025 3:24:03 PM
சென்னை: அறநிலையத்துறையில் சிலைகள் மாயமான விவகாரம் மற்றும் நகைகள், தேர் செய்தததில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி ெதாடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிகாரிகளை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக பழனியில் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி ஓய்வு பெற்ற இணை ஆணையர் முதல் ஊழியர்கள் வரை கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ேசாமஸ்கந்தர், ஏலவார் குழலி அம்மன் சிலை செய்ததில் 8.770 கிலோ தங்கத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாக கூறி கூடுதல் ஆணையர் கவிதாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஒரு புகார் மீது உரிய விசாரணை நடத்தாமல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அறநிலையத்துறையை களங்கப்படுத்தும் ஒரு சில அமைப்புக்களை கண்டித்தும் செப்டம்பர் 27ம் தேதி அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பினர் கூறுகையில்,’சிலை ெசய்ததில் முறைகேடு குறித்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தவில்லை.
மாறாக, அவர்கள், அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இது, பழிவாங்கும் செயல். மேலும் ஒரு சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அறநிலையத்துறை மீது தேவையில்லாமல் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதை கண்டித்தும் நாங்கள் வரும் 27ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில், ஆயிரக்கணக்கனோர் பங்கேற்கின்றனர்’ என்றனர்.