மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக சரிவு
9/5/2025 3:15:58 PM
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,000 கனஅடியாக சரிந்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நேற்று ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதேநிலையில் நீடித்தது. தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில், நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.
அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 8,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 7,000 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.09 அடியாகவும், நீர் இருப்பு 93.61 டிஎம்சியாகவும் உள்ளது.