உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பு: ₹2 கோடி மருந்துகள் கொள்ளை
9/5/2025 3:15:07 PM
காசியாபாத்: உத்தரபிரதேசத்தில், ரூ. 2 கோடி மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், புரோக்கராக செயல்பட்ட டாக்டர் உட்பட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் இருந்து ஆக்ராவில் உள்ள குடோனுக்கு லாரிகள் மூலமாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி மருந்துப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. அப்போது, மீரட் அடுத்த அமர்லா கேட் பகுதியில் மருந்து பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதையடுத்து, தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட கொள்ளை கும்பலை, தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, காசியாபாத் சீனியர் போலீஸ் எஸ்பி வைபவ் கிருஷ்ணா கூறியதாவது: மீரட் அடுத்த பார்டாபூரில் இருந்து ஆக்ராவிற்கு மருந்து ெபாருட்கள் கொண்டு செல்லப்பட்ட லாரியை மடக்கி, மர்ம நபர்கள் சிலர் மருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
அந்த லாரியில், 100 அட்டை பெட்டிகளில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இருந்தன. இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த சன்ஜி, சுரேந்திரன், ஓம்வீர், ரிஷி, அஸ்லாம், சோனு ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், டாக்டர் அனில் குமார் என்பவர், கொள்ளையடிக்கப்பட்ட மருந்து பொருட்களை சில ஏஜென்சிகளிடம் சப்ளை செய்யும் புரோக்கராகவும் செயல்பட்டதால், அவரும் கைது செய்யப்பட்டார். இந்த கும்பல், மருந்து பொருட்களை கொள்ளையடித்து, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 4 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. ெதாடர்ந்து, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.