ஆந்திரா பல்கலைக்கழகத்தில் அரை நிர்வாண அணிவகுப்பு ‘ராக்கிங்’: 8 இன்ஜினியரிங் மாணவர்கள் சஸ்பெண்ட்
9/5/2025 3:13:38 PM
விசாகப்பட்டினம்: ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைக்கழகத்தில், ஜூனியர் மாணவர்களை அரை நிர்வாண அணிவகுப்பு நடத்தி ‘ராக்கிங்’ கொடுமையில் ஈடுபட்ட 8 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் செயல்படும் ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான விடுதி, பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் செயல்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம், விடுதியில் இருந்த சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்கள் சிலரை அரை நிர்வாண முறையில் அணிவகுப்பு நடத்த கட்டாயப்படுத்தி உள்ளனர். சீனியர் மாணவர்களின் ‘ராக்கிங்’ தொல்லையால், ஜூனியர் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாணமாக விடுதிக்குள் அணிவகுப்பு நடத்தினர்.
இதில், அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜூனியர் மாணவரின் அண்ணன் ஒருவர் சீனியர் மாணவராக படித்து வருகிறார். அவர், தனது தம்பி மற்றும் மற்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட ‘ராக்கிங்’ கொடுமை குறித்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதையடுத்து, முதன்மை விடுதி வார்டன் அபுலுவிடம் விசாரணை நடத்தியதில், அவர், ‘ராக்கிங்’ எதுவும் நடக்கவில்லை, விடுதிக்குள் மாணவர்களுக்குள் சிறு தகராறு தான் நடந்தது’ என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இருந்தும், பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஜூனியர் மாணவர்களை அரை நிர்வாண அணிவகுப்பு நடத்தச் சொல்லி ‘ராக்கிங்’ செயலில் ஈடுபட்ட, எட்டு சீனியர் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
‘ராக்கிங்’ தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் தங்கள் புகாரைச் சமர்ப்பிக்கலாம். அல்லது, 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.