டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் ஆராய்ச்சி மையத்தின் 27வது பட்டமளிப்பு விழா: செப்.10ம் தேதி நடக்கிறது: கவர்னர் பங்கேற்கிறார்
9/5/2025 3:08:03 PM
சென்னை: டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 27வது பட்டமளிப்பு விழா வருகிற 10ம் தேதி நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் சிறந்த கல்வி சேவையாற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் இந்தியா மற்றும் யுஎஸ்ஏ, யுகே போன்ற அயல்நாடுகளில் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். அவர்கள் பல்கலைக்கழகத்துடன் அவ்வப்போது தொடர்பும் வைத்துக்கொண்டுள்ளனர்.
தற்பொழுது இந்நிறுவனத்தின் 27வது பட்டமளிப்பு விழா, சென்னை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் கன்வென்சன் சென்டர், ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் வருகிற 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்க உள்ளார். நிறுவன வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம் சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில், விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் இயக்குநர் சோமநாத், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பரதநாட்டிய கலைஞர் ஷோபனா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்த 2,300 மாணவ, மாணவியர் இளநிலை பட்டம், முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களை பெறுகின்றனர்.