18 எம்எல்ஏ வழக்கின் தீர்ப்பு மூலம் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் வீட்டுக்கு போவார்கள்: தினகரன் பேச்சு
9/3/2025 4:01:51 PM
நீடாமங்கலம்: மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத திட்டங்களை கண்டித்து திருவாரூர் மாவட்ட அமமுக சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது:ஆளும் கட்சியினரின் அநியாய மணல் கொள்ளையால்தான் முக்கொம்பு கதவணை உடைந்தது. ஊழல் செய்வதற்காகவே குடிமராமத்து பணி என்கிற பெயரில் கோடி,கோடியாக கொள்ளை அடித்துள்ளனர். கடலூர் முதல் தஞ்சை வரை பூமிக்கடியில் உள்ள நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிக்க மத்திய அரசு அமெரிக்க நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்த போட்டுள்ளது. அதற்கு எடப்பாடி அரசு துணைபோவது பச்சை துரோகம். அந்த சதி திட்டத்தை உயிரை கொடுத்தாவது தடுப்போம்.
முதல்வர் பதவி வெறியில் நான் பேசுவதாக ஓபிஎஸ் கூறுகிறார். மேலும் நான் தியாகியா என கேட்கிறார். நான் தியாகி அல்ல. ஆனால் நான் ஓபிஎஸ் போல் துரோகி அல்ல. நான் முதல்வராக ஆவதற்கு நினைத்திருந்தால் 2016 செப்டம்பர் மாதமே ஆகியிருப்பேன். 18 எம்எல்ஏக்கள் வழக்கில் வரும் தீர்ப்பின் மூலம் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் வீட்டுக்கு போவார்கள். அதனை தொடர்ந்து ஒவ்வொருவராக சிறைக்கு செல்வார்கள். அந்த கண்கொள்ளா காட்சியை காண தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது என்றார்.