உண்ணாவிரதத்துக்கு ஆதரவு..... ஹர்திக் ஆதரவாளர்கள் 10 பேர் கைது
8/27/2018 3:25:35 PM
வதோதரா: குஜராத்தில், ஹர்திக் படேல் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில், கடந்த 2015ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி, பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். ெதாடர்ந்து, பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 2015ம் ஆண்டு போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அந்த அமைப்பின் சார்பில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். ஆனால், ஆமதாபாதில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டு வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை, ஹர்திக் படேல் துவங்கினார்.
இவரது போராட்டத்துக்கு ஆதரவளிக்க, அவரது ஆதரவாளர்கள் 10 பேர், காந்தி நகர், வதோதரா ஆகிய மாவட்டங்களில் பங்கேற்கச் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.