மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.... பாஜ தலைவருக்கு ‘பளார்’: காங். எம்எல்ஏ மீது வழக்கு
8/27/2018 3:25:14 PM
தார்: மத்திய பிரதேசத்தில், உள்ளூர் பாஜ தலைவரை, காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்ததால், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டம் தண்டா பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. குழந்தையின் குடும்பத்திற்கு பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் நிதியுதவி வழங்குவதற்காக இரு கட்சியினரும், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்றனர். பாஜ கட்சி சார்பில், தார் தொகுதி எம்பி சாவித்ரி தாகூர், மாவட்ட தலைவர் பிரதீப் காடியா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில், கான்வானி ெதாகுதி எம்எல்ஏ உமாங் சிங்கார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது, இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே, திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில், தார் மாவட்ட பாஜ தலைவர் பிரதீப் காடியாவை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ உமாங் சிங்கார் கன்னத்தில் அறைந்தார். ‘உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதில், அவர்களின் பாராட்டை யார் பெற வேண்டும்’ என்று காங்கிரஸ் மற்றும் பாஜ நிர்வாகிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, பாஜ தலைவரை காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்ததால், இருகட்சி நிர்வாகிகளுக்குள் கைகலப்பு ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரதீப் காடியா கொடுத்த புகாரின் பேரில் எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ, பாஜ தலைவரை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.