உத்தரபிரதேசத்தில் நூதனம் ‘பூங்காவுக்கு பதில் பல்லுயிர் வனமாக்கலாம்’: மரங்களுக்கு ராக்கி கட்டி போராட்டம்
8/27/2018 3:24:55 PM
நொய்டா: நொய்டாவில், 50 கோடி ரூபாயில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கு பதிலாக, பல்லுயிர் வனமாக்க, அப்பகுதியினர் மற்றும் சிறுவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டி போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேச மாநிலம், நொய்டா மாநகராட்சியின் செக்டர் 91 பகுதி ‘கிரீன் பெல்ட்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது அங்கிருக்கும் மரங்களை வெட்டிவிட்டு, பல்லுயிர் பூங்கா ஒன்றை அமைக்க அரசு முயன்று வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும், பல்லுயிர் பூங்கா அமைக்க, அரசின் சார்பில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, முதற்கட்டமாக ஏற்கனவே 3,000 மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டனர். இதில், தைல மரம், வேம்பு மற்றும் பபூல் மரங்களும் அடங்கும். ஆனால், வேம்பு மற்றும் பபூல் மரங்களை வெட்டக் கூடாது என்று விதிமுறை இருந்தும், அந்த மரங்களையும் வெட்டி சாய்த்து வருகின்றனர்.
கடந்த 3 முதல் 4 மாதங்களாக மரங்களை வெட்டும் வேலையை, மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. வரும் 2031ம் ஆண்டுக்கு முன்னர் 75 ஏக்கர் அளவிலான பல்லுயிர் பூங்கா அமைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருந்தும், செக்டர் 91 பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டப்படுவதில் இருந்து காப்பாற்ற, அங்கிருக்கும் உள்ளூர் மக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘இந்த மரங்கள்தான் எங்களின் நுரையீரலை பாதுகாத்து வருகிறது. ஒரு பல்லுயிர் பூங்காவை அமைக்க எதற்கு இவ்வளவு மரங்களை வெட்டுகின்றனர். இதை ஒரு பல்லுயிர் வனமாக ஆக்கலாமே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.