ராஜஸ்தானில் பரபரப்பு பாஜ முதல்வர் மீது கல்வீச்சு: ஜோத்பூர் சரக போலீஸ் டிஐஜி விளக்கம்
8/27/2018 3:24:37 PM
ஜோத்பூர்: தேர்தல் யாத்திரையின் போது, ராஜஸ்தான் முதல்வர் மீது கல்வீச்சு நடத்தியவர்களை தேடி வருவதாக, ஜோத்பூர் சரக டிஐஜி ெதரிவித்துள்ளார். ராஜஸ்தானில், பாஜ கட்சியைச் சேர்ந்த முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் வாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, முதல்வர் வசுந்தரா ராஜே மாநிலம் தழுவிய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜோத்பூர் மாவட்டம், பிபார்சிட்டியில் சிறப்பு வாகனத்தில் வசுந்தரா ராஜே வந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரது வாகனத்தை குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், முதல்வருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த கும்பலை விரட்டிய போது அவர்கள் தப்பியோடிவிட்டனர். தொடர்ந்து முதல்வர் வசுந்தரா ராஜே தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு ஜோத்பூரில் இருந்து ஜெய்ப்பூர் சென்றார்.
இதுதொடர்பாக வசுந்தரா ராஜே கூறுகையில், ‘‘காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் உத்தரவின்பேரில் என் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய அச்சுறுத் தல்களுக்கு பயப்பட மாட்டேன். வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’’ என்றார்.
மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் துணைத் தலைவர் லால்பிஸ்னோய் கூறுகையில், ‘‘முதல்வர் ராஜே மீது தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் மீது பழி சுமத்தப்படுகிறது’’ என்றார். முதல்வருக்கு எதிராக, ராஜபுத்திர சமூகத்தை ஓபிசி பிரிவில் சேர்க்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால், அவரின் யாத்திரையின் போது, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து, ேஜாத்பூர் சரக போலீஸ் டிஐஜி ராகவேந்திரா சுகாசா கூறுகையில், ‘‘முதல்வர் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போலீஸ் வீடிேயாகிராபர், கல் வீசியவர்கள் குறித்து வீடியோ பதிவு செய்துள்ளார். அவர்களை தேடி பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.