அகமதாபாத்தில் சோகம்.... குடியிருக்க தகுதியற்ற கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி
8/27/2018 3:24:10 PM
அகமதாபாத்: அகமதாபாத்தில், குடியிருக்க தகுதியற்ற கட்டிடம் என்று அறிவிக்கப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 10 பேர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒதவ் எனும் இடத்தில், நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் இறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இரவு முழுவதும் மீட்பு பணிகளை ஈடுபட்டு, சிலரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறியதாவது: இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம், கடந்த 1999ம் ஆண்டு குஜராத் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டது. கட்டிடத்தில் கட்டுமானத்தில் விரிசல்கள் அதிகம் இருந்ததால் குடியிருக்க தகுதியற்றது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இங்கு, 32 பிளாட்டுகளில் வசித்து வந்த 150க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், தங்களது உடைமைகளை எடுத்துவருவதற்காக 10 பேர் மீண்டும் கட்டிடத்திற்குள் சென்றுள்ளனர். அவர்கள், இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, தீயணைப்பு துறை கூடுதல் முதன்மை அதிகாரி ராஜேஸ் பாட் கூறுகையில், ‘‘கட்டிடம் வசிக்க தகுதியற்றது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால், சிலர் கட்டிடத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மீட்பு பணியில், 5 தேசிய பேரிடர் மீட்பு குழு, 3 தீயணைப்பு மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.