4 மாநில சட்டசபை, மக்களவை தேர்தலுக்கு ஆயத்தம் செப். 8, 9ம் தேதி பாஜ தேசிய செயற்குழு: முன்கூட்டியே 3 குழுவை அமைத்தது காங்கிரஸ்
8/27/2018 3:23:48 PM
புதுடெல்லி: வரும் டிசம்பர் வாக்கில் 4 மாநில சட்டசபை தேர்தல், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் ஆகியவை நடக்கவுள்ளதால், காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன் 3 குழுவை அமைத்தது. தொடர்ந்து, பரபரப்பான சூழ்நிலையில், அடுத்த மாதம் 8, 9ம் தேதியில் பாஜ தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. வருகிற 2019ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தல், தேர்தல் பிரசார யுக்தி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதேபோல், தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன், மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வசதியாக 3 குழுக்களை அமைத்து உள்ளார்.
இதில், 9 பேர் கொண்ட மைய முழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு, 13 பேர் கொண்ட விளம்பர குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மட்டும், தமிழகத்தின் சார்பில் மைய மற்றும் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்ெபற்றுள்ளார். மற்றவர் எவருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதியதாக அமைக்கப்பட்ட குழுவினர், தேர்தலுக்கான வேலைகளை துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், பாஜ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 18, 19ம் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 16ம் தேதி காலமானதால் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வருகிற செப்டம்பர் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல், பாஜ கட்சி ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் டிசம்பர் வாக்கில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்தும், மக்களவை பொதுத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் ெதரிவித்தனர்.