திருக்குவளை, திருவாரூர், காட்டூரில் கருணாநிதிக்காக கரைந்த உள்ளங்கள்
8/9/2025 3:51:48 PM
நாகை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அவரது வீட்டில் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு நேற்று முன்தினம் இரவு முதல் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நேற்று கருணாநிதி வீடு முன் வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வீட்டின் முன் கூடியிருந்த பெண்கள் தங்கள் நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொண்டு ஒப்பாரி வைத்தனர். இது பார்த்தவர்களின் இதயத்தை உருக்குவதாக இருந்தது. திருவாரூர் அடுத்த காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் நேற்று ஏராளமானோர் திரண்டு கருணாநிதி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். மவுன ஊர்வலமும் நடந்தது.
நினைவிடத்தில் ஆரம்ப காலம் முதல் காவலராக பணியாற்றி வந்தவர் அதே ஊரை சேர்ந்த சாமிஅய்யா(75). தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கருணாநிதி, அவரது தாயார் நினைவிடத்திற்கு வரும்போது அவரிடம் வாழ்த்து பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி மகாலட்சுமி (65) உடன் வருவார். நேற்று அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மகாலெட்சுமி கருணாநிதியின் மீதான பாசத்தின் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவிற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர் கருணாநிதியின் புகைப்படங்களை கையில் பிடித்தபடி கதறி அழுதார்.
திருவாரூரில் கருணாநிதி படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். திருவாரூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து மறைந்த கருணாநிதிக்கு எம்எல்ஏ அலுவலகம் முன்பாகவும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பிலும் தலைவர் பாலமுருகன் தலைமையில் ரயில் நிலையத்திலிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு பேருந்து நிலையம் மற்றும் பனகல் சாலை, தெற்குவீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்து அங்கு கருணாநிதியின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.