மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட 7 முக்கிய கோயில்களில் சிலைகள் மாயம்: பரபரப்பு தகவல் அம்பலம்
7/24/2018 3:23:03 PM
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட தமிழகத்தில் 7 முக்கிய கோயில்களில் சிலைகள் மாயமாகியிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,645 கோயில்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக விலை மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள், தங்க, வைர நகைகள், பழங்கால கற்சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுக்கு வெளிநாட்டில் மவுசு அதிகம் என்பதால் அதிகாரிகள் சிலர் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சிலையை கடத்துவதாக கூறப்படுகிறது. இதுவரை அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 1,800 சிலைகள் காணாமல் போய் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கான சிலைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளளது. குறிப்பாக கோயில் பதிவேடுகளில் இருந்து சிலைகளின் விவரங்கள் அதிகாரிகளால் அழிக்கப்பட்டும், மாற்று சிலைகளை வைத்து பழைய சிலை போல கணக்குகாட்டியும் மோசடி செய்து இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவட்டாறு பெருமாள் கோயில் உட்பட 7 கோயில்களில் பல கற்சிலைகள், உற்சவர் சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சிலைகள் எங்கே இருக்கிறது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை. ேமலும் பழைய சிலைகள் கோயில் பதிவேட்டில் இருந்து அழிக்கப்பட்டு புதிய சிலைகள் பழைய சிலைகள் போன்று அதிகாரிகளால் கணக்கு காட்டப்பட்டு வந்துள்ளது. இந்த சிலைகள் மாயமானது தொடர்பாக தற்போது தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா 7 கோயில்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் சிலைகள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை. சிலைகள் காணாமல்போன நேரத்தில் அதிகாரிகளும் சிலை மாற்றியது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தினால் அதிகாரிகள் பலர் சிக்க வாய்ப்பிருப்பதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான பழங்கால கற்சிலைகள், ஐம்பொன் சிலைகளுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கடத்தல்காரர்கள் அதிகாரிகள் சிலருடன் கை கோர்த்துக்கொண்டு, சிலையை மாற்றியுள்ளனர். இதுதொடர்பாக புகார் வந்தால் கூட, அறநிலையத்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சிலைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது 7 கோயில்களில் சிலைகள் மாயமாகி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த விவகாரத்திலாவது அறநிலையத்துறை கமிஷனர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சிலையை கண்டுபிடிக்க முடியும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் அறநிலையத்துறை மீது ஏற்பட்ட களங்கத்தை போக்க வழி ஏற்படும். இவ்வாறு அந்த உயரதிகாரி கூறினார்.