உ.பி மாபியா கும்பல் தலைவன் சிறை வளாகத்தில் சுட்டுக்கொலை
7/9/2025 4:41:05 PM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக, அவ்வப்போது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இந்நிலையில், மிரட்டி பணம் பறித்த வழக்கு விசாரணைக்கு, முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டில் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஜான்சி சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன், பக்பத் மாவட்ட சிறைக்கு முன்னா பஜ்ரங்கி கொண்டு வரப்பட்டார்.
அங்கிருந்து இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக போலீசார் வெளியே அழைத்து வந்தனர். சிறை வளாகத்தில், அவரை அழைத்து செல்ல போலீஸ் வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு ரவுடியான சுனில் ரதி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முன்னாவை நோக்கி சுட்டுள்ளார். இதில், முன்னா சம்பவ இடத்திலேயே பலியானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கொலையாளி சுனில் ரதி கைது செய்யப்பட்டான். பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலைக்குள் உள்ள கைதிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.