பஞ்சாப்பில் போதை தடுப்பு நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு கட்டாய ‘சிறுநீர் டெஸ்ட்’: எம்பி, எம்எல்ஏக்களுக்கு சிக்கல்
7/9/2025 4:40:42 PM
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உயிரிழப்பவர்கள் குறித்து ஆளும் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை எனவும், தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், கடந்த 3ம் தேதி, அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அமைச்சரவை, போதையில்லாத பஞ்சாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு, போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து, அரசு ஊழியர்கள், போலீசார், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் போதை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு ஊழியராக பணியில் சேர்வது தொடங்கி பதவி உயர்வு என அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லும் போது, கட்டாய மருத்துவச் சோதனை நடத்தப்படும். ஆண்டு தோறும் பரிசோதனை முகாம் நடத்தி அதன்மூலம் அரசுப்பணியில் இருப்பவர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகின்றனரா என்பது பரிசோதிக்கப்படும் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த முதல்வர் அமரிந்தர் சிங், ‘‘என்னுடைய சிறுநீரில் போதை நுண்ணுயிர் இருக்கிறதா என்பதை அறிய டெஸ்டுக்காக சிறுநீர் மாதிரியை எடுத்து கொடுப்பேன்’’ என்று அறிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சிறுநீர் பிடித்து, அரசு மருத்துவமனையில் கொடுத்து தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொள்கின்றனர். இதனால், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சமாதானம் அடைந்தனர்.
மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சதீஸ் சந்திரா கூறுகையில், ‘‘தலா ரூ.500 மதிப்புள்ள போதை மருத்துவ சோதனை ‘கிட்’ 5 லட்சம் கருவிகள் வாங்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சோதனை கூடங்கள் அமைக்கப்படும். சோதனை முடிவுகள் ரகசியம் காக்கப்படும். தொடர்ந்து, போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு போதை டெஸ்ட் செய்ய, ரூ.20 முதல் 25 கோடி ரூபாய் வரை செலவிட அரசு முடிவு செய்துள்ளது’’ என்றார். பஞ்சாப் மாநில தலைமை செயலக பணியாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.ஹய்ரா கூறுகையில், ‘‘போதை டெஸ்ட் முறையை வரவேற்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, எம்பி, எம்எல்ஏ உட்பட அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் தான், போதை மாபியாக்களுடன் தொடர்பில் உள்ளனர்’’ என்றார்.
8,977 கடத்தல்காரர்கள்
போதை வஸ்துகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு, எளிதாக பஞ்சாப்பில் விற்கப்படுகிறது. இதற்காக, பெரிய அளவிலான மாபியா கும்பல் செயல்படுகிறது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பஞ்சாப் அரசாங்கம் திணறி வருகிறது. கடந்தாண்டு மார்ச் முதல் மாநில மற்றும் பாகிஸ்தான் எல்லையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு போதை பொருட்கள் கடத்தியதாக 18 ஆயிரத்து 977 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3,900 பேருக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 5,610 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அரசு தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் சிறுவர்களிடையே போதைப் பழக்கம் அதிகம் பரவி வருவதாகவும், இதை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், சிறுவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை ஒழிக்க, தேசிய அளவிலான செயல் திட்டத்தை, ஆறு மாதங்களுக்குள் வகுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை அடுத்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘2016ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, ஆகஸ்ட், 20ல் பதில் அளிக்க வேண்டும். மேலும், போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி கல்வியில் பாடத் திட்டங்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.