ஜீப்பும் லாரியும் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தினர் 5 பேர் சாவு: கேரளாவில் இன்று அதிகாலை பயங்கரம்
7/9/2025 4:38:11 PM
திருவனந்தபுரம்: திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஜீப்பும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே உப்பளா பகுதியில் இருந்து ஒரு ஜீப் இன்று அதிகாலை சுமார் 5.50 மணியளவில் கர்நாடகா மாநிலம் மங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் குழந்தைகள் பெண்கள் என்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 13 பேர் இருந்தனர். இந்த நேரத்தில் எதிரே மங்களூரில் இருந்து காசர்கோடு நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக ஜீப்பும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஜீப்பின் முன் பகுதி நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்து விட்டது. ஜீப்பில் இருந்த பாத்திமா (65), நஸிமா (30), அஸ்மா(38), இன்டியா (41). முஸ்தாக் (35) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் காசர்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 பேரையும் அதிரடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த 5 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்த வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீப்பில் வந்தவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூர் உள்ளால் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் பாலக்காட்டில் உள்ள உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு மீண்டும் மங்களூர் திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.