காரை வாடகைக்கு விடுவதாக வாங்கி அடமானம் வைத்து பணம் மோசடி: பலே ஆசாமி சிக்கினார்
7/9/2025 4:25:45 PM
தாம்பரம்: இணையதளத்தில் விளம்பரம் செய்து காரை வாடகைக்கு விடுவதாக வாங்கி, அதை அடமானம் வைத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை பெரம்பூர் அன்பழகன் முதல் தெருவை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மகன் ஜாஹீர் பாஷா (29). இவர் தனது காரை, இணையதளத்தில் விற்பனை செய்வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த குரோம்பேட்டை நேருநகர், அஸ்தினாபுரம் பிரதான சாலையை சேர்ந்த சிவகுமார் (36) என்பவர் அணுகி, ‘’ நான் சொந்தமாக கார் வாடகைவிடும் நிறுவனம் நடத்துகிறேன். உங்கள் காரை விற்பனை செய்யாமல் தன்னிடம் வாடகைக்கு கொடுத்தால், தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு மாதந்தோறும் 22 ஆயிரம் ரூபாய் தருகிறேன். என்னிடம் 20க்கும் மேற்பட்ட கார்கள் இருகிறது” என்றார்.
இதை நம்பிய ஜாஹீர் பாஷா தனது காரை சிவகுமாரிடம் கொடுத்து வாடகைக்கு ஒட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதன்படி காரை வாங்கிய சிவகுமார், முதல் மாதம் 22 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துள்ளார். அதன்பிறகு 5 மாதங்களுக்கு மேல் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஜாஹீர் பாஷா, தனது காரை திரும்ப ஒப்படைக்கும்படி சிவகுமாரிடம் கேட்டுள்ளார்.அதற்கு சிவகுமார், ‘’காரை வாடகைக்குவிட்ட நிறுவனத்தில் பிரச்னை உள்ளது. அதுவரை மற்றொரு காரை பயன்படுத்தும்படி வேறு காரை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஜாஹீர் பாஷா சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சிவகுமாரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் ஜாஹீர் பாஷா காரின் ஆவணங்களை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் பலரிடம் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எத்தனை பேரிடம் இதுபோன்று காரை வாங்கி ஏமாற்றியுள்ளார் என்று போலீசார் விசாரித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவக்குமாரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.