ஒரு பக்கம் வதந்திகள் என்றாலும் உண்மையாகவே அதிகரித்துள்ள குழந்தை கடத்தல் சம்பவங்கள்: ஆய்வில் அதிர்ச்சி
7/9/2025 4:24:51 PM
புதுடெல்லி: குழந்தைகள் கடத்தல் குறித்து வதந்திகள் பரவி வந்தாலும் மற்றொரு பக்கம் உண்மையாக ஒவ்வொரு வருடமும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்தியால் கடந்த இரண்டு மாதங்களில், 30 பேருக்கும் மேற்பட்டோர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் துலேயில் ஜூலை 1ம் தேதி 5 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர் அதே வேளையில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும், குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்தவும், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவரக்கோரி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில், கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் 40.4 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த விகிதம் 22.7 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கடந்த 2015ம் ஆண்டில் 41 ஆயிரத்து 893 குழந்தைகளும், 2014ம் ஆண்டில் 37 ஆயிரத்து 854 குழந்தைகளும் கடத்தப்பட்டு இருந்தனர். அந்த வகையில் பார்க்கிறபோது, குழந்தை கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து உள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. அதே வேளையில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கை சம்பவங்களை ஒப்பீடு செய்கையில் கடந்த 2016ம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2015ம் ஆண்டில் 94 ஆயிரத்து 172 வழக்குகளாக இருந்தது. இதன் மூலம் ஓர் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 13.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2016ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமான குற்றங்கள், குழந்தைகள் கடத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் சிறுவர் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவி நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பான மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டு சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.