திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு
7/9/2025 4:24:21 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி செல்வி (40). இவர், திருவள்ளூர் - காக்களூர் சாலையில் உள்ள தேவாலயத்துக்கு நேற்று மாலை சென்று விட்டு, இரவு 8 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், திடீரென செல்வியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.
செல்வி, சத்தம் போட்டும் பலனில்லை. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் செல்வி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த, சில மாதங்களாக பைக்குகளில் மின்னல் வேகத்தில் வருவோர், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து, கழுத்தில் கிடக்கும் நகையை பறித்து செல்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சர்வ சாதாரணமாக இச்சம்பவம் நடந்து வருகிறது.