எல்லையில் 10 கிலோ தங்கக்கட்டி பறிமுதல் : காரில் கடத்திய 2 பேர் கைது
7/9/2025 3:42:34 PM
புதுடெல்லி: மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு, சீனா, வங்கதேசம், மியான்மர், பூடான் போன்ற நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில், வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூடானில் இருந்து சிலர் தங்கம் கடத்தி வருவதாக டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, மேற்கு வங்காளத்தின் சிலிகுரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, புல்பாரி பகுதியில் வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த காரில், தலா 1 கிலோ எடை கொண்ட 10 தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.விசாரணையில், தங்கக்கட்டிகளை ஜெய்கான் - பெண்ட்சொல்லிங் எல்லை வழியாக கடத்தி வந்ததாகவும், பீகாரின் முசாபர்நகருக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. மேலும், இந்த தங்கக்கட்டிகளை பெண்ட்சொல்லிங் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து, பூடானை சேர்ந்த சிலர் கொடுத்து விட்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.3.18 கோடி இருக்கும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் 1ம் தேதியும் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கக்கட்டிகளை சிலிகுரி அருகே, டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். மொத்தமாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 152 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.