தீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர்
7/9/2025 3:41:41 PM
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் சகோதரர் ஷம்சுல் ஹக் என்பவர் கடந்த மே மாதம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷம்சுல் ஹக்கை தேடி வந்தனர். இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தபடி, ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் ஷம்சுல் ஹக் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், கடந்த மே மாதம் 22ம் தேதி, ஷம்சுல் ஹக், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்ததாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும், புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் இணைவது இயல்பான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.