புதிய ரூபாய் நோட்டுகளுக்கு விமான செலவு 29.41 கோடி
7/9/2025 3:41:13 PM
புதுடில்லி: கடந்த, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, நாடு முழுவதும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதால், மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். இருந்தும், அவசர நிலையை கருத்தில் கொண்டு, புதிதாக அச்சிடப்பட்ட நோட்டுக்கள் இந்திய விமானப் படையின் சரக்கு விமானங்கள் மூலம், நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், விமானங்கள் மூலம் பணம் கொண்டு சென்ற போது எவ்வளவு ரூபாய் செலவு செய்யப்பட்டது’ என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டு, ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி லோகேஷ் பத்ரா விண்ணப்பித்தார்.இதற்கு விமானப்படை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய விமானப்படையின் முன்னணி சரக்கு விமானங்கள் மூலம் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டன. இதற்காக விமானப்படைக்கு 29.41 கோடி ரூபாய் வழங்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிட 2016 - 17ம் ஆண்டில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று ரிசர்வ் வங்கியிடம் கேட்ட கேள்விக்கு, 7,965 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.