தமிழக சட்டசபையில் லோக்அயுக்தா மசோதா நிறைவேற்றம்: திமுக, காங். ஆதரவு
7/9/2025 3:40:16 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று லோக் அயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே 29ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடைசியாக வியாழக்கிழமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசினர். இதையடுத்து பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, பொதுத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை உள்ளிட்ட 8 துறைகள் மீது நடைபெற்ற விவாதத்துக்கு அத்துறைகளை கவனிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசினர்.
அதைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அவர்கள் வெளியிட்டனர். பின்னர் அரசின் சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட லோக் அயுக்தா மசோதாவை 5வது மசோதாவாக அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் அமைச்சர் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதால், அது சட்டமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படும். அதன்பின்னர் லோக் அயுக்தா அமைக்கப்படும். அதில் நீதிபதி நியமிக்கப்படுவார். முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அமைப்புக்கு முழு அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. இதனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதை தொடர்ந்து கடந்த 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் மாலையில் ஒத்திவைக்கப்படும்.