நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைக்க ஆலோசனை சென்னை வந்தார் அமித்ஷா: பாஜ மூத்த தலைவர்கள் வரவேற்றனர்
7/9/2025 3:39:52 PM
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றி வியூகம் அமைக்க ஆலோசனை நடத்துவதற்காக இன்று காலை அமித்ஷா சென்னை வந்தார். அவரை பாஜ மூத்த தலைவர்கள் வரவேற்றனர். மாலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தயாராகி வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளை பாஜக மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலமாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில், 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை கண்காணிக்க 25 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களைத் தவிர 2750 பேர் மகா சக்தி கேந்திரா உறுப்பினர்களாகவும், 13,056 பேர் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சக்தி கேந்திரா ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இன்று காலை புனேயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விமானநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவர்களிடம் சால்வைகளை பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து, 12 மணிக்கு அவர் சாலை வழியாக, தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர் இல்லத்துக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதை தொடர்ந்து விஜிபி தங்க கடற்கரையில் பகல் 2 மணிக்கு நடைபெறும் உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பாஜ மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி வியூகம், பிரசார வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் தமிழகத்தில் பாஜவை வலுப்படுத்துவதற்காக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் பாஜ நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு 11 மணி அளவில் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.