மெகபூபா ஆட்சியில் ஊழல் : கவர்னரின் டுவிட்டர் பக்கத்தில் குவியும் புகார்
7/8/2025 5:03:47 PM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பாஜ ஆதரவுடன், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைமையிலான கூட்டணி ஆட்சியில், முதல்வராக பிடிபி தலைவர் மெகபூபா முப்தி பதவி வகித்தார். இதனிடையே, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜ வாபஸ் பெற்றதால், தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்கள், அரசு மீது புகார்கள், குறைகளைத் தெரிவிக்க ஆளுநர் என்.என்.வோரா உத்தரவின் பேரில், அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் உருவாக்கப்பட்டது.தற்போது, பலர் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடு, ஊழல் புகார்களை பதிவிட்டு வருகின்றனர். புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜி.ஹாஜி என்பர், ‘காஷ்மீரில் உள்ள எஸ்கேஐஎம்எஸ் மருத்துவமனையின் இயக்குநரை நியமித்ததில் முப்தி தலைமையிலான அரசு தவறு செய்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பிடிபி கட்சி எம்எல்ஏ சையது இஷ்பக், ‘அரசின் பல்வேறு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 250 பேரை பிடிபி இளைஞர் அணி தலைவர் வஹீத்-யுர்-ரஹ்மான் பரா பணியமர்த்தியுள்ளார்’ என, பதிவிட்டுள்ளார். புகார்கள் குவிந்து வருவதால், இதுதொடர்பாக அறிக்கை அனுப்பும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆளுநர் வோரா உத்தரவிட்டுள்ளார்.மேலும், ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்ற பெயரில் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் மியான்மர் முஸ்லிம்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கி அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு கோரிக்கை வந்துள்ளது. இதற்கு மறுப்பு பதிவாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்ற பெயரில் அவர்கள் உள்ளே புகுந்து தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் ஆளுநரின் ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.