பழங்கால மரகதம், மாணிக்கம் பதித்தவை ப.சிதம்பரம் வீட்டில் பல கோடி நகை கொள்ளை
7/8/2025 5:02:37 PM
* துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மீறி நடந்ததால் பரபரப்பு
* சிசிடிவி கேமரா பதிவு மூலம் 2 வேலைக்கார பெண்களிடம் விசாரணை
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மீறி பல கோடி மதிப்பிலான பழங்கால மரகதம், மாணிக்கம் பதித்த நகைகள், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தனது மனைவி நளினி சிதம்பரத்துடன் வசித்து வருகிறார். ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் அவர் தற்போது டெல்லியில் உள்ளார். இதனால் அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நுங்கம்பாக்கம் வீட்டில் வசித்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால் ப.சிதம்பரம் வீட்டிற்கு 24 மணிநேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரது அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ள பழங்கால நகைகளை எடுக்க முயன்றார். அப்போது பீரோவில் பல ேகாடி மதிப்புள்ள பழைய கால தங்க நகைகள், மரகதம், மாணிக்கம் பதித்த நகைகள், விலை உயர்ந்த முத்துக்கள், 6 விலை உயர்ந்த பட்டு புடவைகள், ரூ. 1.5 லட்சம் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து கணவர் ப.சிதம்பரத்திற்கும் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் ஆலோசனைபடி நளினி சிதம்பரம் தனது தனி செயலாளர் முரளி மூலம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, நுங்கம்பாக்கம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், வீட்டில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவத்தில் ப.சிதம்பரம் வீட்டின் கதவு, அறைகளின் கதவு கள், பீரோக்கள் எதுவும் உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ேபாலீசார் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்கள் முகமூடி அணிந்து கொண்டு ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் அறைக்கு செல்வது ேபான்றும் சிறிது நேரம் கழித்து ஒரு பையுடன் திரும்பும் காட்சி பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து அறைக்கு சென்ற பெண்களின் உருவத்தையும், நளினி சிதம்பரத்தின் வீட்டில் வேலை செய்யும் பணி பெண்களின் உருவத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்களான வெண்ணிலா, விஜி ஆகிய இரண்டு பேர் உருவத்துடன் ஒத்துப் போனது. அதை தொடர்ந்து கொள்ளை குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ப.சிதம்பரம் வீட்டில் வேலை செய்து வரும் இரண்டு பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், ப.சிதம்பரம் வீட்டில் வெளியாட்கள் யாரேனும் பணி பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு உள்ளே சென்று பல கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பல கோடி மதிப்பிலான தங்கம், மரகதம், மாணிக்கம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.