வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் சர்ச்சை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அதிகாரம்... பொதுநல மனுவை தள்ளுபடி செய்து அதிரடி
7/6/2025 3:33:38 PM
புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி மீது சர்ச்சை கிளம்பியது. இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும், அனுபவமற்ற நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதாகவும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர் உட்பட 4 நீதிபதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வழக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கும்படி கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூஷண் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. இந்த வழக்கு கடந்த, ஏப்ரலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘வழக்குகளை ஒதுக்கீடு செய்வதை ஒரேயொரு நீதிபதிதான் செய்ய முடியும். அவர் தலைமை நீதிபதியாக மட்டுமே இருக்க முடியும். எனவே, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதாடினார். சாந்தி பூஷண் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவேவும், சாந்தி பூஷணின் மகனும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷணும் ஆஜராகினர். ‘‘வழக்குகளை விசாரணைக்காக ஒதுக்கீடு செய்வதை கொலிஜியமோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் அதிக நீதிபதிகள் கொண்ட குழுவோதான் முடிவு செய்ய வேண்டும். தலைமை நீதிபதி தன்னிச்சையாக, வழிகாட்டு நெறிமுறைகள் இன்றி இதை ெசய்ய முடியாது’’ என்று துஷ்யந்த் வாதாடினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘வழக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது. நீதிபதிகள் அனைவருக்கும், தலைமை நீதிபதி தான் தலைவர்’ என்று தெரிவித்துள்ளனர். மேலும், வழக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க ேகாரி மனு தாக்கல் செய்த சாந்தி பூஷணின் பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்தனர்.