சாய், சிவ் நாடார் கல்லூரியை பல்கலைக்கழகமாக்க சட்ட மசோதா: 5ம் கிளாஸ் படித்தவரெல்லாம் வேந்தராகிவிடுவார்கள் என குற்றச்சாட்டு
7/6/2025 3:32:57 PM
சென்னை: சாய், சிவ் நாடார் கல்லூரியை பல்கலைக்கழகமாக்க நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, 5ம் கிளாஸ் படித்தவரெல்லாம் வேந்தராகிவிடுவார்கள் என்று குற்றம்சாட்டினர். தமிழக சட்டசபையில் நேற்று சாய் மற்றும் சிவ் நாடார் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. இந்த மசோதாக்களுக்கு திமுக உறுப்பினர்கள் பொன்முடி, ரகுபதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். திருக்கோவிலூர் பொன்முடி(திமுக): தனியார் பல்கலைகழகளுக்கு அனுமதி கொடுப்பதற்கான மசோதா நிறைவேற்றப்படுகிறது. இந்த மசோதாவில் தனியார் பல்கலைக்கழகங்கள் தனிச்சையாக செயல்படும் வகையில், எந்த வித அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் செயல்படும் வகையில் உள்ளது.
ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் தன்னாட்சி முறையில் செயல்பட்ட போதும் கூட அதற்கு வேந்தராக கவர்னர் தான் இருந்தார். ஆனால் இந்த தனியார் பல்கலை முழு பல்கலைக்கழகங்களை போன்று செயல்படக்கூடியதாக உள்ளது. இதனால் எந்தவித அரசின் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் நிலை ஏற்படும். ்மத்திய அரசு பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுகிறதா?. நிகர் நிலை பல்கலைக்கழகம் என்றால் பரவாயில்லை. ஆனால் இது முழு பல்கலைக்கழகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். திருமயம் ரகுபதி: தனியாருக்கு பல்கலைக்கழகம் தொடங்க அனுமதிக்கும் இந்த மசோதாவை திமுக முழுமையாக எதிர்க்கிறது.
மதுரை தியாகராயர் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகமாக்க திமுக ஆட்சியில் கோரிக்கை வைத்த போது நீங்கள் எதிர்த்தீர்கள். அதனால் நாங்களும் அந்த கல்லூரிகளின் கோரிக்கையை நிராகரித்தோம். தனியாரிடம் பல்கலைக்கழகங்கள் சென்றால் கல்வி வியாபாரமாகிவிடும். எனவே அதை ஊக்குவிக்கக் கூடாது. 100 ஏக்கர் நிலமும், ரூ.50 கோடி பணமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பல்கலைக்கழகத்தை தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி தரத்தை இது பாதிக்கும். 5ம் கிளாஸ் படித்தவர்கள் எல்லாம் பல்கலைக்கழக வேந்தர் ஆகிவிடுவார்கள். எனவே இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தனியார் பங்களிப்புடன் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் தான் இல்லை. எனவே 2015ம் ஆண்டு எஸ்எஸ்என் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ேபாடப்பட்டது. சாய் கல்லூரி ரூ.300 கோடி செலவில் 100 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி கேட்டுளளனர். இங்கு அனுமதிக்காவிட்டால் இது அடுத்த மாநிலத்துக்கு சென்று விடும். இந்த சூழ்நிலையில் தான் சட்டம் இயற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏதாவது தவறு நடந்தால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 35 சதவீதம் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கீடு உண்டு. மேலும் 69 சதவீத இடஒதுக்கீடும் பின்பற்றப்படும். இதை தொடர்ந்து திமுக உறுப்பினர் தொடர்ந்து பேச சபாநாயகர் தனபாலிடம் அனுமதி கேட்டார். அவர் பேச அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் பல்கலைக்கழகங்களுக்கான மசோதா நிறைவேறியது.