விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்புக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
7/6/2025 3:28:20 PM
ஐதராபாத்: விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்புக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். விமான போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமான போக்குவரத்து ஆராய்ச்சி மையத்தை ஐதராபாத்தில் அமைக்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில், ‘‘விமான போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், அதற்கான உள்கட்டமைப்பு பணிகள், உபகரணங்கள் கொள்முதல், ஊழியர்களுக்கான திறன்மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான ஆராய்ச்சிக்காக, ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, நிறைவான பயணம் போன்றவற்றுக்காக இந்த ஆராய்ச்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் சாமானியரும் விமானத்தில் பயணம் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை தற்போது உள்ளது’’ என்றார்.