லக்னோவில் இந்து - முஸ்லிம் தம்பதிக்கு நீண்ட இழுபறிக்கு பின் பாஸ்போர்ட்: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
7/5/2025 4:18:47 PM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில், கடந்த சில வாரங்களுக்கு முன், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முகமது சித்திக், ஹிந்து மதத்தைச் சேர்ந்த அவரது மனைவி தன்வி சேத் ஆகியோர், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து, ஜூன் 20ம் தேதி பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விசாரணைக்கான அழைப்பின் பேரில் சென்றனர். அப்போது, அங்கு பணியில் இருந்த பாஸ்போர்ட் அதிகாரி, தம்பதியரின் திருமணம் தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டதாகவும், முகமது சித்திக்கை இந்து மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தியதாகவும் புகார் எழுந்தது. மேலும், அவருக்கு பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, பாஸ்போர்ட் வழங்குவதற்கான பரிந்துரையை செய்ய மறுத்துவிட்டதாக, தம்பதியர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு, தம்பதியர் கொண்டு சென்றனர்.
அவர், அந்த தம்பதிக்கு பாஸ்போர்ட் கொடுக்க உத்தரவிட்டார். அடுத்த சில நாட்களில், தம்பதியருக்கு பாஸ்போர்ட் கொடுக்க மறுத்த விகாஸ் மிஸ்ரா டெல்லிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பாஸ்போர்ட் அதிகாரி மாற்றப்பட்டதற்காக அமைச்சர் சுஷ்மாவை, சமூக வலைதளங்களில் பாஜ மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர். அதாவது, சுஷ்மா சுவராஜ், முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை திருப்திப்படுத்த, பாஸ்போர்ட் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதற்காக, அதிகாரியை இடமாற்றிவிட்டார் என்று பதிவிட்டிருந்தனர். இதற்கிடையே, கலப்பு திருமண தம்பதியின் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக, லக்னோவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் விசாரணை நடத்தியது.
இதில், லக்னோ பாஸ்போர்ட் அதிகாரி வரம்பு மீறி செயல்பட்டது தெரியவந்தது. உள்ளூர் போலீஸ் அளித்த அறிக்கையில், தம்பதியருக்கு பாதகமாக எதுவும் கூறாததால், முகமது - தன்வி சேத்துக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களுக்கு, பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி பியுஷ் வர்மா கூறுகையில், ‘‘முகமது சித்திக் - தன்வி சேத் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பாஸ்போர்ட் அதிகாரி வரம்பு மீறி கேள்விகள் கேட்டது, விசாரணையில் உறுதியாகி உள்ளதால், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.