அதிமுக பெண் எம்பிக்கு ஓடும் ரயிலில் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
7/5/2025 3:16:50 PM
திருச்சி: அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த்(47). 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, நெல்லை மாநகராட்சி மேயராக இருந்தார். 2014ம் ஆண்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு விஜிலா சத்யானந்த் நெல்லையில் இருந்து ரயிலில் குளிர்சாதன பெட்டியில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். உடன் பெண் உறவினர் ஒருவரும் வந்தார். ரயில் திருச்சி அருகே வந்தபோது விஜிலா சத்யானந்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்ததும், ரயில் நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை முதலுதவி மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அதே ரயிலில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். திருச்சி ஜங்ஷனிலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் பொன்மலை ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. பொன்மலையில் ரயில் நின்றதும், விஜிலா சத்யானந்த் பாதுகாப்பாக இறக்கப்பட்டார். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் விஜிலா சத்யானந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்பியும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான ப.குமார், மாவட்ட துணை செயலாளர் அருள்ஜோதி, முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகரன், டாக்டர் தமிழரசி ஆகியோர் இன்று நேரில் சென்று விஜிலா சத்யானந்த் எம்பியிடம் நலம் விசாரித்தனர்.