காஷ்மீர் கவர்னருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை
7/5/2025 3:16:21 PM
ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் வோராவை சந்தித்து சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில், பாஜ-மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவல், பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் ஏற்படும் வன்முறைகளால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாட்கள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று அம்மாநில கவர்னர் வோராவை சந்தித்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை, அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். காஷ்மீருக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என உறுதியளித்தார். கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங் இன்று அமர்நாத் கோயிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்.