பாறாங்கல் விழுந்து 4 வீரர்கள் பலி
6/30/2018 5:24:11 PM
இடாநகர்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் மலைப்பகுதிகளில் இருந்து பாறைகள், பெரிய கற்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த, 20 வீரர்கள் மேற்கு சியாங் மாவட்டத்தின் பசார் பகுதியில் இருந்து ஒரு மினிபஸ் மூலம் லோயர் சியாங் மாவட்டத்துக்கு நேற்று கிளம்பினர். லோயர் சியாங் மாவட்ட தலைநகரான லிகாபலி பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், மினிபஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது மலைப்பகுதியில் இருந்து ராட்சத பாறாங்கல் ஒன்று திடீரென பெயர்ந்து மினிபஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சுக்குள் இருந்த 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 8 வீரர்கள் காயமடைந்தனர்.படுகாயமடைந்த 2 பேருக்கு லிகாபலி ராணுவ மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.