தொகுதிக்கு 25 ஆயிரம் போலி வாக்காளர்கள்: காங். - மஜத கட்சிகள் மீது எடியூரப்பா பாய்ச்சல்
6/30/2018 5:23:37 PM
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், அமைச்சர் பதவி, வாரிய தலைவர் பதவி, ஆதாய பதவிகள் கேட்டு இரண்டு கட்சியினரும் தினமும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பாஜ மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசியதாவது: சட்டசபை தேர்தலில் பாஜ 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தும், எதிர்க்கட்சியாக அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதும் காலம் கெட்டு போகவில்லை; ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்யும். அதற்கான காலம் கனிந்து வருகிறது. பாஜவின், 104 எம்எல்ஏக்களுக்கும், புதிதாக தேர்வாகியுள்ள 8 எம்எல்சிக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த தேர்தலில், 40 எம்எல்ஏக்களாக இருந்த பாஜ, தற்போது 104 இடத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால், 132 இடத்தில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், 78க்கு தள்ளப்பட்டுள்ளது. மஜத 38 ஆக குறைந்துள்ளது. எந்த தொகுதிக்கு சென்றாலும், பாஜ தோல்விக்கான காரணம் என்ன என்று மக்கள் கேட்கின்றனர். காங்கிரஸ், மஜதவினர் ஒவ்வொரு தொகுதியிலும் தலா, 25 ஆயிரம் வரை போலி வாக்காளர்களை இணைத்துள்ளனர். அதனால் தான், நம்முடைய கட்சியின் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.இதில், மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், ரமேஷ் ஜிகஜினகி, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் உட்பட பலர் பேசினர். கர்நாடக சட்டசபை தேர்த லுக்கு பின், முதன்முறையாக பாஜ செயற் குழு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.