அருண்ஜெட்லி விளக்கம்; ராகுல் கிண்டல் சுவிஸ் வங்கியில் டெபாசிட் அதிகரிப்பு: இந்தியர்களின் பணம் கருப்பா, வெள்ளையா?
6/30/2018 5:22:09 PM
புதுடெல்லி: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும், கறுப்பு பணத்தை மீட்கும் முயற்சியில், மத்தியில் ஆளும், பாஜ அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை மீட்பது குறித்து, அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.இதற்கிடையே, சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தியர்கள் டெபாசிட் தொகை, கடந்தாண்டில், 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக பேசிவருகின்றன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:சுவிஸ் வங்கிகளில், இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளதாக தவறான தகவல் பரப்பி வரும் நபர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், சுவிஸ் வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட் செய்து உள்ளனர். அவர்கள் செய்யும் டெபாசிட், இந்தியர்கள் என்ற பட்டியலின் கீழ் பார்க்கப்படுகிறது.
அதேபோல், முறையான வகையில் இந்தியர்கள் சிலர் ெடபாசிட் செய்துள்ளனர். இதற்கு அப்பாற்பட்டு சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அதை கறுப்பு பணம் என கருத முடியும். எனவே, அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் அனைத்தும் கறுப்பு பணம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.இவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘‘ சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்களின் வங்கி கணக்கில், தலா 15 லட்சம் ரூபாய் போடுவதாக, கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில் மோடி கூறினார். கடந்த, 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட உயர்மதிப்பு கரன்சி தடை நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும் என்றார். ஆனால், 2018ம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதை கருப்பு பணம் அல்ல; வெள்ளை பணம் என்கிறது மத்திய அரசு’’ என, கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.