டெல்லியில் நாளை மறுநாள் காவிரி ஆணைய முதல் கூட்டம் குமாரசாமி அவசர ஆலோசனை: அனைத்து கட்சியினர் பங்கேற்பு
6/30/2018 5:21:13 PM
பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் குறித்து, பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சியினருடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இதனால் முதல்நாள் கூட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பிரச்னையை தீர்க்கும்வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் இடைக்கால தலைவராக மத்திய அரசின் நீர் ஆணைய தலைவரான மசூத்உசேன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி ஆணைய உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் நியமிக்கப்பட்டார். இது போல கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் தங்கள் மாநில பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து அதன் முதல் கூட்டம் நாளை மறுநாள்(திங்கள்) டெல்லியில் நடக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடைக்கால தலைவர் மற்றும்2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. மீதமுள்ள 4 உறுப்பினர்களை தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் நியமித்து உள்ளது. இந்த ஆணையத்தின் தலைமையகம் புதுடெல்லியில் செயல்படுகிறது. கூட்டம் ஜூலை 2ம் தேதி(நாளை மறுநாள்) நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை நடத்த வேண்டுமானால் தலைவர் உள்ளிட்ட 9 பேரில் குறைந்த பட்சம் 6 பேராவது கலந்து கொள்ள வேண்டும்.6 பேர் ஆஜராகாவிட்டால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, ஒரு சில நாள் இடைவெளி விட்டு மீண்டும் கூட்டப்படும். முதல் கூட்டம் என்பதால் நாளை மறுதினம் நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் எடுத்துரைக்கவேண்டிய அம்சங்கள் குறித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் ஆணைய உறுப்பினர் பிரபாகர், காவிரி ஒழுங்காற்று குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் காவிரி தொழில் நுட்பகுழுவின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.177.25 டிஎம்சியை எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், தற்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்றும் 2ம் தேதி கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்த முடிவு செய்து உள்ளனர்.அதே நேரத்தில் கர்நாடக அரசின் சார்பில், பழைய பாக்கி தண்ணீர் எல்லாம் தருவதற்கில்லை. இந்த ஆணையத்திலேயே தங்களுக்கு பல முறையீடுகள் உள்ளது என பல காரணங்களை சொல்லலாம். கேரளத்தின் சார்பில், தங்களுக்கு ஒதுக்கப்படும் காவிரி நீரின் அளவு மிக குறைவு. அதே நேரத்தில் ஆணையம், ஒழுங்காற்று குழுவுக்கான செலவின தொகையில் 15 சதவீதம் தங்களால் தர முடியாது என்ற வாதத்தை வைக்கலாம். புதுச்சேரி அரசும் தங்களுக்குரிய 7 டிஎம்சியை தமிழக அரசு தரவேண்டும் என வலியுறுத்தும்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விட ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.குமாரசாமி ஆலோசனை: டெல்லியில் 2ம் தேதி நடைபெறும் கூட்டம் குறித்து ஆலோசிக்க இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான்சவுதாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்து கட்சி குழு கூட்டம் தொடங்கியது. இதில் துணைமுதல்வர் பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், சட்ட அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மாநில அரசின் தலைமை வக்கீல் உதய் ஹொள்ளா, மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பேரவை, மேலவை உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி ஆணையத்தில் தங்கள் மாநிலத்துக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவினை அந்த மாநில உறுப்பினர் டெல்லி கூட்டத்தில் வலியுறுத்துவார் என தெரிகிறது.