ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் தீ: 6 மணி நேரம் போராடி தீயணைப்பு
6/29/2018 5:15:27 PM
திருப்போரூர்: சென்னை அருகே சிறுதாவூரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட பங்களா உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவ்வப்போது அங்கு சென்று ஓய்வெடுப்பார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு இந்த பங்களா சசிகலா உறவினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வப்போது பங்களாவுக்கு ஆடி, பென்ஸ் போன்ற கார்கள் வந்து செல்லும். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 2 முறை பங்களா வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பங்களாவை சுற்றியுள்ள தோட்டத்தில் உள்ள சவுக்கு மரங்கள், புற்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் 3வது முறையாக நேற்று மாலை 6 மணியளவில் பங்களாவில் வடக்கு பக்கத்தில் உள்ள காலி நிலத்தில் திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி பங்களாவை சுற்றிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
பங்களாவின் அருகே உள்ள மற்றொரு தனியார் பங்களா வழியாக தீ பரவியது. இதையடுத்து திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது தண்ணீர் காலியாகி விட்டது. இதையடுத்து ஓஎம்ஆர் சாலையில் சென்ற ஒரு தண்ணீர் டேங்கர் லாரியை மடக்கி தண்ணீரை நிரப்பி அணைக்க முற்பட்டனர். அந்த தண்ணீரும் காலியானது. தீயின் வேகம் அதிகரித்ததால் கல்பாக்கம், சிறுசேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்றவர்களும், சிறுதாவூர், ஆலத்தூர், வெங்களேரி, பண்டிதமேடு, பையனூர் கிராமங்களை சேர்ந்தவர்களும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நள்ளிரவு 12.30 மணிக்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் இன்று காலை விசாரணை நடத்தினர். தீ விபத்து ஏற்பட்டது எப்படி, யாரேனும் சதி செயலில் ஈடுபடுகிறார்களா, பாதுகாவலர்களை மீறி யார் உள்ளே செல்ல முடியும் என்ற ரீதியில் தனியார் செக்யூரிட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.