பேராசிரியர் மீது ரசாயனம் வீசிய ஏபிவிபி நிர்வாகிகள் 5 பேர் கைது
6/29/2018 5:12:34 PM
ராஜ்கோட்: குஜராத் மாநிலம், ராஜ்கோட் அடுத்த புஜி பகுதியில், கச் பல்கலைகழகம் செயல்படுகிறது. சென்ட் உறுப்பினர் தேர்வுக்கான வாக்காளர் பட்டியல் பணி வேதியியல் துறை பேராசிரியர் கிரின் பாக்ஸி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்த சிலர், பதிவாளர் மற்றும் துணை வேந்தர் அறை அருகே நடந்து சென்ற பேராசிரியர் கிரின் பாக்ஸ் மீது கருப்பு நிற ரசாயனத்தை வீசினர். அதிர்ச்சியடைந்த அவர், நிலைகுலைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், குஜராத் மாநில பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பல்கலைகழகத்தின் 45 உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ரம் கோத்யா கூறியதாவது: ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சிலர், பேராசிரியர் கிரின் பாக்ஸியிடம் வாக்காளர் பட்டியலில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டதாக கூறி விவாதம் செய்துள்ளனர். அதற்கு அவர், நடைமுறைகளை சரியாக தான் பின்பற்றியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில், வேதியியல் ஆய்வகத்தில் இருந்த கருப்பு நிற ரசாயனத்தை பேராசிரியர் மீது வீசியுள்ளனர். இதுதொடர்பாக, ஏபிவிபி மாநில இணை செயலாளர் ராம் காட்வி, அதிபூர் சிட்டி செயலாளர் ரவி காட்வி, உறுப்பினர்கள் ேதஜஸ் பகவதி, கிரிட்ஸின் ஜடேஜா, தருவ் ஜோஸி ஆகியோரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.