பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது அமித்ஷாவுக்கு திரிணாமுல் பதிலடி
6/29/2018 5:09:47 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது என பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ. சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். மே.வங்கத்தில் தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும். இந்த மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜ உருவாகி வருகிறது. மக்களவை தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ வெற்றி பெறும். விரைவில் பா.ஜ. இங்கு ஆட்சியை பிடிக்கும் என்றார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாஜ ஆளும் மாநிலங்களில் வரவுள்ள தேர்தல்களை பற்றி மட்டுமே அமித்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும். பாஜவினரின் பிரித்தாளும் சூழ்ச்சி மேற்கு வங்கத்தில் எடுபடாது. பொதுவாக காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தம் போடும். புரூலியா கூட்டத்தில் பேசிய அமித்ஷாவின் இன்றைய பேச்சும் அப்படித்தான் உள்ளது. குஜராத் மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜவின் செல்வாக்கு சரிந்து வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.